ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்கள் உள்ளது. கமலுடன் நான் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்குகிறது.
இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆர்வக் கோளாறில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். அப்படி செல்லும்போது அடிபட்டால், அவர்களுக்குதான் காயம் ஏற்படும். படிக்கும் வயதில், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சிந்தனை, செயல் முழுவதும் படிப்பில்தான் இருக்க வேண்டும். அந்த நேரத்தை தவற விட்டுவிட்டால், வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
முக்கியமாக, இளைஞர்கள் தங்கள் உடல்நலம், ஆரோக்கியத்தைப் பார்த்து கொள்ள வேண்டும். மது, கஞ்சா என போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். அதில் சென்றால் வாழ்க்கை கெட்டுப்போய்விடும். நீங்கள் மட்டுமின்றி, உங்கள் தாய், தந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையும் நரகமாகிவிடும். அதுபோன்ற நண்பர்களின் அருகில்கூட சென்று விடாதீர்கள் என்று அவர் கூறினார்.














