தமிழகத்தில் 20 தொகுதி வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைபடி, உரிய ஆவணங்களுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் துணையோடு, 20 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர்.
திருப்போரூர், சிதம்பரம், ஓசூர், ராமநாதபுரம், மதுரவாயல், குன்னூர், குளித்தலை, பழனி, பொள்ளாச்சி, தாராபுரம், மதுரை மத்திய தொகுதி, கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
20 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் சட்டத்துக்கு புறம்பாக வேட்புமனுக்களை நிராகரித்துள்ளனர். எனவே கூடுதல் தலைமைச் செயலர் மூலமாக விசாரணை நடத்தி, எங்கள் வேட்பாளர்களின் மனுக்களை வாங்கி, ஏப்.9-ம் தேதி வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.














