திமுக – தேமுதிக கூட்டணி தாமதமாக அமைந்துள்ளது. ஏன், இந்த கூட்டணி இவ்வளவு நாளாக அமையவில்லை என நான் வருத்தப்படுகிறேன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார்.
விருத்தாசலத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் சாதாரண கோயில் அல்ல. பழைமை வாழ்ந்த கோயில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக கேப்டன் ஜெயித்தார். நான் அப்போதிலிருந்து கேப்டனுக்கு நிழலாகவே இருந்து வந்தேன். எங்களது திருமணத்தை கருணாநிதியும் மூப்பனாரும் முன் நின்று நடத்தி வைத்தனர்.
கருணாநிதி குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அவ்வளவு பெரிய நட்பு உள்ளது. விஜய்காந்த் மேல் கருணாநிதிக்கு அவ்வளவு பாசம் இருந்தது.
இப்போது எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் விரும்பியபடி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்தக் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்.
மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்பார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நினைத்த விஷயம். விஜயகாந்த்தும் கருணாநிதியும் இருந்தபோதே கூட்டணி அமைந்திருக்க வேண்டும். இப்போதுதான் வழி பிறந்திருக்கிறது. தாமதமாக திமுக – தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது. ஏன், இந்த கூட்டணி இவ்வளவு நாளாக அமையவில்லை நான் வருத்தப்படுகிறேன். இன்று குடும்ப உறவு கூட்டணி உறவாக மாறி இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.














