ஐபிஎல் 2026 அலசல்: இறுதிக்கட்ட பந்துவீச்சில் தடுமாறும் சிஎஸ்கே

0
29

டி20 போட்​டிகளில் டெத் ஓவர்​கள் என கூறப்​படும் 16 முதல் 20 ஓவர்​கள் வரையி​லான காலக்​கட்​டம் பந்து வீச்சாளர்களுக்கு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது. இந்த ஓவர்​களில் பந்​து​வீச்​சாளர்​கள் தங்​களது பல்​வேறு திறன்களை கையாண்டு எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களை பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்ள அனுமதிக்​காமல் கட்​டுப்​படுத்த முயற்​சிப்​பார்​கள்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த இறு​திக்​கட்ட ஓவர்​களில் சிஎஸ்கே அணி மாற்று சிந்​தனை​கள் இல்​லாமலும், செயலற்ற தன்​மை​யுடன் இருப்​ப​தாக விமர்​சனங்​கள் எழத்தொடங்கி உள்​ளன. 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இது​வரை 3 ஆட்டங்​களில் விளை​யாடி உள்ளது. இதில் ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டம் 12.1 ஓவர்​களி​லேயே முடிவடைந்​தது.

சிஎஸ்​கேவுக்கு எதி​ராக 128 ரன்​கள் இலக்கை துரத்​திய அந்த அணி 47 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இதை தவிர்த்து பஞ்​சாப், ஆர்​சிபி அணிகளுக்கு எதி​ராக சிஎஸ்கே அணி டெத் ஓவர்​களில் 40 பந்​துகளை வீசி 111 ரன்​களை தாரை​வார்த்​துள்​ளது. இது மோச​மான சாதனை​யாகும். ஏனெனில் இறு​திக்​கட்ட ஓவர்களில் சிஎஸ்​கே​வின் எகானமி ரேட் 16.65 ஆக உள்​ளது. இது மற்ற அணி​களை​விட மோச​மானது. நேற்று முன்தினம் பெங்​களூரு​வில் சிஎஸ்​கேவுக்கு எதி​ராக நடைபெற்ற ஆட்​டத்​தில் ஆர்​சிபி 250 ரன்​களை குவித்​தது.

ஐபிஎல் வரலாற்​றில் சிஎஸ்கே அணி 250 ரன்​களை தாரை வார்த்​தது இதுவே முதன்​முறை​யாகும். மேலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே 78 ரன்​களை வாரி வழங்​கியது. இதுவும் முதன்​முறை​யாக நிகழ்ந்​தது. அனைத்​துக்​கும் மேலாக ஆர்​சிபி அணிக்கு எதி​ரான போட்​டி​யில் சிஎஸ்கே பந்​து​வீச்​சாளர்​கள் இறு​திக்​கட்ட ஓவர்​களில் என்ன செய்வதென்றே தெரி​யாமல் திணறினர். 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்​டிகளில் வெறும் நான்​கில் மட்​டுமே வெற்றி பெற்று புள்​ளிப்​பட்​டியலில் கடைசி இடத்​தைப் பிடித்​திருந்​தது.

ஆனால், அப்​போதும் கூட அவர்​களின் டெத்​-ஓவர் எகானமி ரேட் 11 ஆகவே இருந்​தது. நடப்பு சீசனில் பஞ்​சாப் அணிக்கு எதி​ராக சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி இறு​திக்​கட்​டத்​தில் 2.4 ஓவர்​களில் 33 ரன்​களை தாரை​வார்த்து இருந்​தது. இதனால் 210 ரன்​கள் இலக்கை விரட்​டிய பஞ்​சாப் அணி 8 பந்​துகளை மீதம் வைத்து எந்​த வித நெருக்​கடி​யும் இல்​லாமல் வெற்றி கண்​டது. நேற்று முன்​தினம் ஆர்​சிபி அணி​யின் பேட்​ஸ்​மேன்​களான டிம் டேவிட், ரஜத் பட்​டி​தார் கூட்​டணி கடைசி 4 ஓவர்​களில் 78 ரன்​களை வேட்​டை​யாடியது.

இது ஐபிஎல் வரலாற்​றிலேயே கடைசி நான்கு ஓவர்​களில் ஒரு அணி விட்​டுக்​கொடுத்த ஐந்​தாவது அதி​கபட்ச ரன்களாகும். ஆர்​சிபி அணிக்கு எதி​ராக சிஎஸ்கே பந்​து​வீச்சாளர்​கள் தொடக்​கத்​தில் சிறப்​பாகவே செயல்பட்டனர். 5-வது ஓவரிலேயே விராட் கோலியை வெளி​யேற்​றினர். பந்து சற்று மெது​வாக வரும் ஆடு​களம் மற்​றும் வேகம் குறைந்த அவுட்ஃபீல்டு ஆகிய​வற்​றைச் சாதக​மாகப் பயன்​படுத்​தி, பவர்​பிளே​யில் ஆர்​சிபி-யை 51 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தினர். 11 ஓவர்​கள் முடி​வில் அந்த அணி 2 விக்​கெட் இழப்​புக்கு 98 ரன்​கள் எடுத்திருந்தது, அதாவது ஓவருக்கு ஒன்​பது ரன்​களுக்​கும் குறை​வாகவே எடுத்​திருந்​தது.

அதன் பின்​னரே ஆட்​டத்​தின் போக்கு முற்​றி​லும் மாறியது. ஆடு​களம் பேட்​டிங் செய்ய எளி​தான​தா​லும் ரஜத் படி​தார், தேவ்​தத் படிக்​கல் ஆகியோர் அதிரடியைத் தொடங்கியதாலும், பந்​து​வீச்​சாளர்​கள் தங்​கள் கட்டுப்பாட்டை முழு​மை​யாக இழந்​தனர். அடுத்த 5 ஓவர்களில் 74 ரன்​கள் விளாசப்​பட்​டன. தேவ்​தத் படிக்​கல் ஆட்​ட​மிழந்த பிறகு களமிறங்​கிய டிம் டேவிட் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டார். இதில் சிஎஸ்கே நிலை​தடு​மாறியது. திட்​ட​மிடலை​யும், அதை செயல்​படுத்​தும் விதத்தி​லும் சிஎஸ்கே நிலைகுலைந்​தது.

டெத் ஓவர்​களில் சிஎஸ்கே வீசிய பந்​துகளில் பாதிக்​கும் மேற்​பட்​டவை ஃபுல் டாஸ் அல்​லது ஃபுல் லெந்த் பந்துகளாகவே இருந்​தன. ஒரே ஒரு யார்க்​கர் மட்​டுமே வீசப்​பட்​டது. பந்​துகளின் நீளத்​திலோ அல்​லது வேகத்​திலோ பெரிய அளவில் மாற்​றங்​கள் இல்​லாமல் இருந்​தது. இதன் விளை​வாக, கடைசி நான்கு ஓவர்​களில் ஆர்​சிபி அணி 9 சிக்​ஸர்​களை விளாசி​யது. இதில் டிம் டேவிட் மட்டுமே தனி ஆளாக 8 சிக்​ஸர்​களைப் பறக்​க​விட்​டார்.

சிஎஸ்கே பந்​து​வீச்​சாளர்​களுக்கு டெத் ஓவர்​களில் பந்​து​வீசிய அனுபவம் இல்லை என்று சொல்ல முடி​யாது. நூர் அகமது ஆர்​சிபி போட்​டிக்கு முன்​ன​தாக, ஐபிஎல் தொடரின் டெத் ஓவர்​களில் 14 ஓவர்​களுக்கு மேல் வீசியுள்ளார். அவரது எகானமி ரேட் 8.02 ஆக மட்​டுமே இருந்தது. ஆனால், நேற்று முன்​தினம் அவர் வீசிய 17-வது ஓவரில் மட்​டும் 21 ரன்​கள் விளாசப்​பட்​டது.

2025-ம் ஆண்​டின் தொடக்​கத்​திலிருந்து டி 20 போட்​டிகளில் ஜேமி ஓவர்​டனின் டெத்​-ஓவர் எகானமி 9.26 ஆக இருந்​தது. ஆனால், இவர் வீசிய 19-வது ஓவரில் டிம் டேவிட் 30 ரன்களைக் குவித்து சிஎஸ்கே அணியை கடும் சிதைவுக்கு உட்​படுத்​தி​னார். அன்​ஷுல் கம்​போஜ் சிறந்த யார்க்​கர் மூலம் டிம் டேவிட்டை ஆட்​ட​மிழக்​கச் செய்​தார், ஆனால் அது ‘நோ-​பால்’ ஆகி​விட்​டது. இந்த தவறு சிஎஸ்கே அணிக்கு 40 ரன்​களுக்​கும் மேல் இழப்பை ஏற்​படுத்​தி​யது. அப்​போது டிம் டேவிட் 29 ரன்​களில் இருந்​தார். இறு​தி​யில் அவர், 70 ரன்​களு​டன் ஆட்​டத்தை முடித்தார்.

தனது முதல் மூன்று ஓவர்​களில் 28 ரன்​கள் மட்​டுமே கொடுத்​திருந்த நூர் அகமது, தனது கடைசி ஓவரில் பந்​துகளை வேக​மாக வீசி​னார். ஆடு​களத்​தில் பந்து பெரிய அளவில் சுழலாத​தால் டிம் டேவிட் அந்​தப் பந்​துகளை மிக எளி​தாக சிக்​ஸர்​களுக்கு பறக்​கவிட்​டார். 19-வது ஓவரில் ஜேமி ஓவர்​டன் தொடர்ந்து பேட்​டருக்கு வசதி​யாக ஸ்லாட்​டிலேயே வீசி​னார்.

டிம் டேவிட் அவற்றை எல்​லைக்​கோட்​டிற்கு வெளியே அனுப்​பிக்​கொண்டே இருந்​தார். அன்​ஷுல் கம்​போஜ் ஓரளவுக்கு சிறப்​பாக வீசி​னார், ஆனால் முக்​கிய​மான நேரத்​தில் அவர் வீசிய நோ-​பால் எல்​லா​வற்​றை​யும் பாழாக்கியது. சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்​போது, “பந்து வீச்​சில் நாங்​கள் செயலற்ற நிலை​யில் இருந்தோம். குறிப்​பாக வேகப்​பந்து வீச்சாளர்கள் சரி​யான திட்​டத்​தைத் தேடிக்கொண்டிருந்தனர்.

ஆட்​டத்​தின் முதல் பாதி சிறப்​பாகவே இருந்​தது, ஆனால் அழுத்​த​மான நேரங்​களில் பந்​து​வீச்​சு திட்டங்களை செயல்​படுத்​து​வ​தில் தவறு நடந்​து​விட்​டது. டிம் டேவிட் போன்ற மிக அதிரடி​யான வீரருக்கு எதி​ராகப் பந்​து​வீசும்​போது, மிக​வும் துல்​லிய​மாக செயல்பட வேண்​டும். ஒரு​முறை நாம் பின்​னடைவைச் சந்​தித்​து, அவர் தனது அதிரடி வேகத்​தைப் பிடித்​து​விட்​டால், அவரைத் தடுப்​பது கடினம். அதோடு ஒரு நோ-​பாலும் வீசப்​பட்​டது என்​பதை மறந்​து விடக் கூடாது.

அதில் மட்​டுமே சுமார் 40 ரன்​கள் அடங்​கி​யிருக்​கிறது. இது போன்ற மிகச்​சிறிய தவறுகளே பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தும். அனைத்து பந்​து​வீச்சு அணிகளும் ஆடு​களத்​திலிருந்து ஏதேனும் சிறு உதவியைப் பெற​வும், அதிரடி பேட்​டர்​களைக் கட்​டுப்​படுத்​தும் வழிகளைக் கண்​டறிய​வும் திணறிக்​கொண்​டிருக்​கின்​றன.

எனவே, இது பந்​து​வீச்​சாளர்​களுக்கு ஒரு கடுமை​யான போட்​டி​யாகும்” என்​றார். நடப்பு சீசனில் ஹாட்​ரிக் தோல்​வியடைந்​துள்ள சிஎஸ்கே தனது டெத்​-ஓவர் பந்​து​வீச்சு சிக்​கல்​களுக்கு விரை​வில் தீர்​வைக்​ காண வேண்​டும்​. இல்​லை​யெனில்​, 5 முறை சாம்​பியன்​ பட்​டம்​ வென்​ற அந்​த அணிக்கு இது மீண்​டும்​ ஒரு சோக​மான சீச​னாக முடிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here