சிஎஸ்கே அணியின் பிரச்சினைகள்: இர்பான் பதான் அலசல்

0
26

சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இதில் சிக்கல் இல்லை. முன்பெல்லாம் இப்படி தோல்வி அடைந்தால் தோனி எப்படியும் அணியை மீட்டுக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை வறண்டு போய் விட்டது.

இந்நிலையில் சிஎஸ்கே பிரச்சினைகளை முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அலசியுள்ளார். பந்து வீச்சில் அனுபவமின்மையும் சொதப்பலும் சேர டாப் ஆர்டர் பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சன் சொதப்பி வருகிறார். ருதுராஜ் சரியாக ஆடவில்லை. சர்பராஸ் கான் மட்டுமே கொஞ்சம் தாக்கம் காட்டுகிறார்.

மற்றபடி விலை அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர் கார்த்திக் சர்மாவெல்லாம் காலி. ஆயுஷ் மாத்ரே சீரான முறையில் ஆடவில்லை. பந்து வீச்சில் கலீல் அகமது தவிர மற்றெல்லோரும் ஓவருக்கு 10-11 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுக்கின்றனர். நூர் அகமது இந்த சீசனில் இன்னும் தன் விக்கெட் கணக்கைத் தொடங்கவில்லை. இந்நிலையில் இர்பான் பதான் சிஎஸ்கே அணி குறித்து கூறியதாவது, “நூர் அகமது சிஎஸ்கேவின் பெரிய பிரச்சினையாக இப்போது உள்ளார்.

இந்த சீசனில் இதுவரை 10 ஓவர்கள் வரை வீசி 100 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டுள்ளார் ஆனால் விக்கெட்டுகள் எதுவும் இல்லை. அவர் தன் ரன் – அப்பின் கோணத்தை கொஞ்சம் மாற்றினால் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஒரு புறம் வீழும் அவரது கை இன்னும் கொஞ்சம் நேராக நிமிர்ந்தால் அவரால் சிறப்பாக வீச முடியும் என்று கருதுகிறேன்.. நூர் அகமது பந்து வீச்சின் மீது எனக்கு ஏமாற்றமே.

அன்று டிம் டேவிட் ஆடும்போது பார்த்தேன், அவர் எப்போதும் லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியேதான் நிற்கிறார். ஆகவே அவருக்குக் கொண்டு வந்து ஆஃப் ஸ்டம்ப் அல்லது அதற்கு வெளியே வீசும் போது அவருக்கு மட்டையைச் சுழற்றி பந்தை விரட்ட சுலபமாகி விடுகிறது. அவருக்கு அடிக்க இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும் ஆட்டோமேட்டிக்காக அவருக்கு இடம் கொடுக்குமாறுதான் வீசுகின்றனர்.

அவருக்கு மிடில் ஸ்டம்பிலோ, லெக் ஸ்டம்பிலோ வீச வேண்டும், இல்லையென்றால் அவர் உங்களை விளாசவே செய்வார்.. அவரை தொடக்கத்திலேயே முடக்கி விட வேண்டும் சிஎஸ்கே அதைச் செய்யவே இல்லை. மேட் ஹென்றி பந்து வீச்சும் எனக்கு பெரிய ஏமாற்றமே. மேட் ஹென்றி பெரிய அனுபவஸ்தர்.

அவர் நன்றாக வீசுபவர், சிக்கன விகிதமும் நன்றாகவே வைத்துள்ளார். ஆனால் அவரால் அவர் திறமைக்கேற்ப செயல்பட முடியவில்லை என்பது ஆச்சரியமே. அவரைப் போன்ற அனுபவசாலி அடிக்கக் கூடிய ‘ஆஃப்வாலி’ பந்தை வீசலாமா? விராட் கோலி மேலேறி வந்ததைப் பார்த்து அன்ஷுல் காம்போஜ் பவுன்சர் வீசி அவரை வீழ்த்தினார்.

விராட் கோலி அவ்வாறு மேலேறி வரும்போதும் மேட் ஹென்றி ஃபுல் லெந்த் பந்தை வீசுகிறார். இதனால்தான் அவர் மீது எனக்கு ஏமாற்றமே.” என்றார் இர்பான் பதான் சிஎஸ்கே அணி வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here