ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று அளித்த பேட்டியில் அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறியதாவது: யுஏஇ ஒரு அர்த்தமற்ற குழப்பத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது உறவின் மூலம் செய்த தவறுகளை அது மீண்டும் மீண்டும் தொடர்கிறது.
அடிப்படையில், யுஏஇ போரில் இறங்கினால் துபாயும் அபு தாபியும் தகர்க்கப்படக்கூடும். சுற்றுலாத் தலங்களாக வடிவமைக்கப்பட்ட இவ்விரு நகரங்களும் ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்கும் பலப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்ல. பணக்காரர்கள் பார்ட்டி செய்வதற்கும், முதலீடு செய்வதற்குமான இடங்கள் இவை.
ஒரு போர் மண்டலத்துக்குள் நுழைவது என்பது துபாய் போன்ற ஒரு இடத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும். யுஏஇ தெரிந்தே ஒரு முட்டாள்தனமான குழப்பத்தில் சிக்கியுள்ளது. ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ மூலம் அமெரிக்காவுடன் இணைந்த வளைகுடா நாடுகளின் முடிவு ஒரு பேரழிவுக்கான அழைப்பு.
இது அவர்களை அமெரிக்கப் பாதுகாப்பை அதிகம் நம்பியிருக்கச் செய்துள்ளது. முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹென்றி கிஸிங்கர் குறிப்பிட்டதைப் போல இது பேரழிவுக்கான நட்பு ஆகும். ஒவ்வொரு நாளும் கிஸிங்கரின் புகழ்பெற்ற கூற்றை நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன். அமெரிக்காவுக்கு எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அதன் நண்பனாக இருப்பது மரணத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.














