சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்பது, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைத் தேடுவது எவ்வளவு கடினமானதோ, அதே அளவு சாத்தியமற்றது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சுவாரசியமாக இம்முறை சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது: சஞ்சு சாம்சனை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு இணையான ஒரு மாற்று வீரரைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை.
அவரைப் போன்ற அதே திறமை கொண்ட ஒருவரை நாம் தேடலாம் அல்லது அவர் விளையாடிய அதே வரிசையில் வேறொருவரை விளையாட வைக்கலாம். ஆனால், விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு எப்படி ஒரு மாற்று இல்லையோ, அதேபோல சஞ்சு சாம்சனுக்கும் மாற்று என்பது கிடையாது. ஏனெனில், அவர் சிறந்த வீரர்.
இந்த ஆண்டு சரியாகத் திட்டமிட்டு ஆட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் அதிக கவனம் செலுத்துவோம். கடந்த சீசனில் எங்களால் அதைச் சரியாகச் செய்ய முடியாமல் போனது. நாங்கள் சரியாகத் திட்டமிட வேண்டும். கடந்த ஆண்டு 5 முதல் 6 போட்டிகளில் கடைசி ஓவரிலோ அல்லது கடைசி பந்திலோ நாங்கள் தோல்வியடைந்திருந்தோம்.
அந்தப் போட்டிகளை வெற்றியாக மாற்றியிருந்தாலோ அல்லது ஆட்டத்தை இன்னும் சிறப்பாகக் கணக்கிட்டு விளையாடியிருந்தாலோ எந்த கேள்விகளும் எழுந்திருக்காது. ஏனெனில், அந்தப் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்போம். ஒவ்வொரு டி20 போட்டியிலும், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய 3 அல்லது 4 முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்தச் சிறிய முடிவுகளை சரியான வியூகம் மற்றும் திட்டமிடலுடன் எடுத்தால், இந்த ஆண்டு எங்களுக்கு வித்தியாசமானதாக அமையும்.
நான் 17 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்தேன். இதுவரை பல ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், ஏற்றங்களை விட இறக்கங்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததுடன், ஒரு கிரிக்கெட் வீரராக நான் யார் என்பதையும் சரியாக புரிந்துகொண்டனர். இவ்வாறு ரியான் பராக் கூறினார்.














