‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கை விவ​காரம்: தேர்தல் ஆணையத்துக்கு மறு ஆய்​வுக்​குழு பரிந்துரை

0
26

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்​ளார். விஜய்​யின் கடைசிப்​பட​மான இதில் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர்.

கே.​வி.என்​.புரொடக் ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை ஜன.9-ம் ரிலீஸ் செய்ய போவ​தாக அறி​வித்​திருந்​தனர். படத்​தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து படக்​குழு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தணிக்கை சான்​றிதழ் வழங்க உத்தர​விட்​டார். அதை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தாக்கல் செய்த மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தது.

மேலும், இப்​படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பிய தணிக்கை வாரி​யத்​தின் உத்​தரவை எதிர்த்து படத் தயாரிப்​புக்​குழு மீண்​டும் தனி நீதிப​தியை நாட​வும், தனி நீதிபதி இருதரப்புக்​கும் போதிய அவகாசம் அளித்து விசா​ரிக்​க​வும் உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் இப்​படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பியது தொடர்​பாக நேரடி​யாகத் தணிக்கை வாரியத்தையே நாட​வுள்​ள​தால், நிலு​வை​யில் உள்ள வழக்கை வாபஸ் பெற்​றுக் கொள்​வ​தாக படத்​த​யாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்யப்பட்​டதை அடுத்து வழக்கு தள்​ளு​படி செய்யப்பட்டது.

பின்​னர் மார்ச் 9-ம் தேதி மறு ஆய்​வுக்​குழு​வினர் ‘ஜனநாயகன்’ படத்​தைப் பார்ப்​ப​தாக இருந்​தது. அன்று மறு ஆய்​வுக்​குழு உறுப்​பினர் ஒரு​வருக்கு உடல்​நலம் சரியில்​லாத​தால் ரத்து செய்​யப்​பட்​டது. இதையடுத்து மார்ச் 17-ம் தேதி மறு ஆய்​வுக்​குழு​வினர் பார்ப்​ப​தாகக் கூறப்​பட்​டது. அதன்படி படத்தை நேற்று முன் தினம் பார்த்தனர்.

தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு தேர்​தல் விதி​கள் நடை​முறை​யில் இருப்​ப​தா​லும் படத்​தில் அரசி​யல் வசனங்​கள் இடம்​பெற்​றுள்​ள​தா​லும் இப்​படத்​தைத் தேர்தல் ஆணை​யத்​துக்கு மறு ஆய்வு குழு ​பரிந்​துரை செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அவர்​கள் படத்​தைப் பார்த்த பின்னரே தணிக்​கைச் சான்​றிதழ் கிடைக்கும் என்று கூறப்படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here