வடசென்னை பகுதியில் ரூ.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் ரூ.179.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள், முதல்வர் திருமண மாளிகை, மாநகராட்சி அச்சகம், முதல்வர் விளையாட்டுத் திடல், ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சமுதாய நலக்கூடம்
மேலும், ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் வால்டாக்ஸ் சாலை நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ரூ.14.76 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், வியாசர்பாடி, கக்கன்ஜி நகரில் ரூ.10.42 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், தண்டையார்பேட்டையில் ரூ.16.32 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் வெங்கடாபுரம், தெற்கு பூங்கா தெருவில் அமைந்துள்ள முழுநேர கிளை நூலகத்தில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் என, மொத்தம் ரூ.51 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திர சேகர் சாகமூரி, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














