மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?

0
21

மகனை பறி​கொடுத்த தாய்க்கு ரூ.3 லட்​சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தைச் சேர்ந்த ரேவதி என்​பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்​பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்​பரின் இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக்​கொண்​டிருந்​தார்.

அடை​யாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனை​யிட்ட போக்​கு​வரத்து போலீ​ஸார் வாக​னத்​தின் ஆவணங்​களைக் கேட்​டுள்​ளனர். இருசக்கர வாக​னத்​தின் சாவியை​யும் போலீ​ஸார் பறித்​துள்​ளனர்.

இதில் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், அடை​யாறு ஆற்​றில் குதித்​து​விடு​வ​தாக மிரட்​டல் விடுத்​துள்​ளார். ஆனால் போலீ​ஸார் சாவியை தர மறுத்​த​தால் ஒரு கட்​டத்​தில் ஆற்​றில் குதித்து தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

பதற்​றமடைந்த அவரது நண்​பர் சுரேஷ், ராதாகிருஷ்ணனை காப்​பாற்​றும்​படி போலீ​ஸாரிடம் கேட்​டுக் ​கொண்​டும் அவர்​கள் காப்​பாற்​ற​வில்​லை. 45 நிமிடங்​களுக்​குப் பிறகு அங்கு வந்த தீயணைப்​புத் துறை​யினர் ராதாகிருஷ்ணனை சடல​மாக மீட்​டனர்.

போக்​கு​வரத்து போலீ​ஸாரின் அத்​து​மீறல் காரண​மாகவே தனது மகன் ஆற்​றில் குதித்து உயி​ரிழந்​த​தாக குற்​றம் சாட்​டிய ராதாகிருஷ்ணனின் தாயார் ரேவ​தி, மகனின் இழப்​புக்கு ரூ.20 லட்​சம் இழப்​பீடு கோரி​யும், மனித உரிமை மீறலில் ஈடு​பட்டு தனது மகனின் மரணத்​துக்கு காரண​மான போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்கவலி​யுறுத்​தி​யும் மாநில மனித உரிமை ஆணை​யத்​தில் மனுத் தாக்​கல் செய்​தார்.

அந்த மனுவை விசா​ரித்த மாநில மனித உரிமை ஆணை​யம், மகனை பறி​கொடுத்த தாயார் ரேவ​திக்கு ரூ.3 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்க வேண்​டும் என்​றும், சம்​பந்​தப்​பட்ட போக்​கு​வரத்து போலீ​ஸார் மீது துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டுமென்​றும் தமிழக அரசுக்கு கடந்​தாண்டு ஜனவரி​யில் உத்​தர​விட்​டது.

அதன் அடிப்​படை​யில் இது தொடர்​பாக கடந்​தாண்டு பிப்​ர​வரி​யில் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. ஆனால், “அதன்​படி இழப்பீடு வழங்​கப்​பட​வில்​லை, சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸாருக்கு எதி​ராக​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை” எனக்​கூறி ரேவதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மகனை பறி​கொடுத்த தாய்க்கு ரூ.3 லட்​சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்​தும், சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டதா என்​பது குறித்​தும் தமிழக அரசு ஒரு வாரத்​தில்​ விளக்​கமளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here