“2047-க்குள் வளர்ந்த இந்தியா” இலக்கை எட்ட வேண்டுமானால், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா தனது வரலாற்றில் இன்று மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் உங்களின் பார்வை நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்து வருகிறது. இந்த உயரிய இலக்கை எட்டுவது நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் வலிமையையும், தரத்தையும் சார்ந்தது.
ஓர் அறிவுசார்ந்த பொருளாதாரமாக இந்தியா உருவாக வேண்டுமானால், உயர்கல்வியும், ஆராய்ச்சியும் மிக வலுவாக வளர வேண்டியது அவசியம். அந்த வகையில், உயர்கல்வித்துறையில் முக்கிய பிரச்சினையாக இருப்பது பேராசிரியர் காலிப் பணியிடங்கள்தான்.
நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கல்வித் தரமும், ஆராய்ச்சி முன்னேற்றமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை.
ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, உலகளவில் போட்டியிடக் கூடிய தரமான ஆராய்ச்சியை உருவாக்க பல நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தற்போது 28 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, இந்த அளவு 2035-க்குள் 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.
இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் பல்கலைக் கழகங்கள், பேராசிரியர்கள், கல்வி உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கம் தேவை. மற்றொரு முக்கிய பிரச்சினை கல்வியில் அரசின் முதலீட்டு அளவு.
தற்போது, இந்தியா கல்விக்காக உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 2.8 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் இந்த அளவு 6 சதவீதமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு தேசிய முதலீடு ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், வளர்ந்த நாடுகள் 3 சதவீதத்துக்கும் மேல் முதலீடு செய்கின்றன.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணியில்திகழ வேண்டுமானால், ஆராய்ச்சி நிதி அதிகரிக்கப்பட வேண்டும்.
எனவே, 2047-க்குள் இந்தியா முன்னேறிய நாடாக உருவாக வேண்டுமெனில் உயர்கல்வியும், ஆராய்ச்சி தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.














