எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில், நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்குமான மின் ஏல அறிவிப்பை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக இரண்டு பிரம்மாண்டமான பல்நோக்கு வணிக வளாக கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
காந்தி – இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்தக் கட்டிடங்களில் வணிக அங்காடிகள் மற்றும் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது, 3-வது மற்றும் 4-வது தளங்களில் வாகன நிறுத்துமிட வசதிகள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்கும் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்ய மின் ஏலம் மூலமாக விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனம், வாகனங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை முறைப்படுத்துதல், வாகனங்களை வரிசையாக நிறுத்துவதை உறுதி செய்தல் மற்றும் அப்பகுதியைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஏல நடைமுறை அதிக அளவிலான நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் ‘இ-ஏல’ (e-auction) முறையில் நடைபெறவுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தகுதியுள்ள அதிகபட்ச ஏலத்தொகை கோரும் விண்ணப்பதாரருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும்.
இந்த ஏல நடைமுறை, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் www.ireps.gov.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 20-ம் தேதி மாலை 03.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ள ஏலதாரர்கள் இது குறித்த விரிவான விவரங்கள் மற்றும் தகுதி வரம்புகளை மேற்கண்ட இணையதளத்தில் அல்லது கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம், வணிகப் பிரிவு, 2-வது தளம், என்ஜிஒ அனெக்ஸ், பார்க் டவுன், சென்னை – 600003 என்ற முகவரியில் நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.














