ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அத்துடன், ‘ஜெ.எம்.எம்.சி.’ என்ற மருத்துவ இதழை தொடங்கி வைத்ததுடன், ரூ.60 லட்சம் மதிப்பில், கிருஷ்ணகிரி, திருவாரூர் மாவட்டங்களில், இரண்டு பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உயர்நிலை வாஸ்குலர் சி-ஆர்ம் கருவி மற்றும் ஹைப்ரிட் ரத்த நாள அறுவை சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் ரத்த நாள அடைப்பு மற்றும் பெருந்தமனி வீக்கம் போன்ற சிக்கலான நோய்களுக்கு சர்வதேச தரத்திலான எண்டோவாஸ்குலர் சிகிச்சையை குறைந்த நேரத்தில் வழங்க முடியும்.
ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் முதுகுத் தண்டு எண்டோஸ்கோப்பி சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது. இது குறைந்த காயம் மற்றும் விரைவான மீட்பு அளிக்கக்கூடிய பாதுகாப்பான முறையாகும்.
ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 13 வகையான உயர்ரக மயக்க மருந்து இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேசிய அளவில், 1.99 சதவீதம் பார்வை இழப்பு விகிதமாக உள்ளது. தமிழகத்தில், 1.18 சதவீதமாக உள்ளது. 97 அரசு மருத்துவமனைகளில் கண் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது என்றார்.














