‘முண்டாசுப்பட்டி’யில் நடிகராக அறிமுகமான முனீஷ்காந்த், இப்போது முக்கியமான குணச்சித்திர நடிகர். சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘தாய் கிழவி’யில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டிருக்கிறது. சினிமாவில் 12 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அவரிடம் பேசியதில் இருந்து…
Q
‘தாய் கிழவி’ல உங்க நடிப்பு பாராட்டப்பட்டு வருது…
A
‘முண்டாசுப்பட்டி’ மாதிரி, ‘தாய் கிழவி’ படமும் என் கேரியர்ல முக்கியமான படம். இதுல நடிச்சு முடிச்சுட்டு டப்பிங் பேசும்போதுதான், உடல் மொழி மட்டுமல்ல, டப்பிங்கும் ஒரு நடிப்புத்தான்னு புரிஞ்சுகிட்டேன். இந்தப் படத்துல நான் பேசிய வசனங்கள் ரசிக்கப்படறதுக்கு டப்பிங்கும் முக்கிய காரணம்.
அந்தப் படத்து இயக்குநர் சிவக்குமார் முருகேசன் சொல்லிக் கொடுத்த விதமே எனக்குப் பிடிச்சிருந்தது. என் கேரக்டர் பேசப்படறதுக்கு அவர்தான் காரணம். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்ல ஒருத்தரா அவர் இருப்பார். படப்பிடிப்பிலேயே அவரோட நடவடிக்கைகளைப் பார்த்து நான் உள்பட எல்லோருமே அவரையும் அந்தப் படத்தையும் நம்பினோம். அது மாதிரியே இன்னைக்கு அந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருக்கு.
Q
ராதிகா சரத்குமார் சீனியர் நடிகை. அவங்க கூட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?
A
‘தாய் கிழவி’யை பொறுத்தவரை அவங்கதான் கதாநாயகி. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப அமைதியா இருந்தாங்க. என்னன்னா, மனசுக்குள்ளயே ரிகர்சல் பார்த்துட்டு இருந்தாங்க. இந்தப் படத்துல அவங்க மேக்கப் கஷ்டமானது. அவங்க கூட நடிச்சது பெரிய அனுபவம். நிறைய கத்துக்க முடிஞ்சுது.
Q
ஆரம்பத்துல காமெடி ரோல் பண்ணிட்டிருந்தீங்க. திடீர்னு குணச்சித்திரத்துக்கு மாறிட்டீங்களே…
A
ஆமா. நான் வில்லனா நடிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் அந்தப் படத்துல ‘நீங்கதான் இந்த காமெடி கேரக்டரை பண்றீங்க’ன்னு சொல்லும்போதே, ‘சார் வேண்டாம், என்னைய பார்த்து யார் சிரிப்பாங்க?னுதான் சொன்னேன். ‘இல்லை, இது உங்களுக்கு சரியா வரும்’னு சொன்னார்.
அவர் சொன்னபடி பண்ணினேன். காமெடி ஒர்க் அவுட் ஆகிருச்சு. அப்பதான் புரிஞ்சுகிட்டேன், ‘ஒரு டைரக்டர் நினைச்சா, யாரையும் எந்த கேரக்டருக்குள்ளயும் பொருத்திட முடியும்’னு. அப்பவே ஒரு இயக்குநரோட நடிகரா இருக்கறதுதான் சிறந்ததுன்னு முடிவு பண்ணினேன்.
தொடர்ந்து அப்படித்தான் பண்ணிட்டு வர்றேன். ‘இந்த கேரக்டர் உங்களுக்கு சரியா வரும்’னு ஒரு டைரக்டர் சொன்னா, அவரை நம்பி நடிக்கிறேன். ‘தாய் கிழவி’ வரை அப்படித்தான். தொடர்ந்து அப்படித்தான் இருப்பேன்.
Q
வில்லனா நடிக்கிற ஆசை என்னாச்சு?
A
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய ‘புரூஸ் லீ’ படத்துல காமெடி வில்லனா நடிச்சேன். அப்பவே இயக்குநர் கிட்ட ‘இது எனக்கு சரிபட்டு வருமா?’ன்னு கேட்டேன். அவர் அந்த கேரக்டர்ல முனீஷ்காந்துதான் தெரிவார்னு சொல்லி நடிக்க வச்சார். அந்தப் படத்துக்குப் பிறகு நான் எதிர்பார்த்த வில்லன் வேடம் கிடைக்கலை. இப்ப ‘தாய் கிழவி’ இயக் குநர்கிட்ட ‘வில்லனா நடிக்க ஆசையிருக்கு. உங்க படத்துல வாய்ப்பிருந்தா கொடுங்க’ன்னு கேட்டேன். ‘அதுக்கான தகுதி உங்ககிட்ட இருக்கு’ன்னு சொன்னார். பார்ப்போம்.
Q
கதையின் நாயகனா ஒரு படத்துல நடிச்சீங்களே?
A
நீங்க ‘மிடில் கிளாஸ்’ படத்தை மனசுல வச்சுட்டு கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன். அதுல நான் கதையின் நாயகன் இல்லை. அதுல விஜயலட்சுமிதான் மெயின் கதாபாத்திரம். எனக்கு கதையை நகர்த்துற கேரக்டர்தான். அப்படி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும்னு என் மேல நம்பிக்கை வச்சு இயக்குநர்கள் கேட்கும்போது அதை பண்ணித்தான் ஆகணும். அப்படித்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அது போல கதாபாத்திரங்கள் கிடைச்சா நடிப்பேன்.
Q
சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆச்சு. நீங்க நினைச்சது நிறைவேறியிருக்கா?
A
‘முண்டாசுப்பட்டி’ படம் ரிலீஸ் ஆகி முதல் காட்சி முடிஞ்சதும் பதற்றத்தோட ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் வாசல் முன்னால நான் நின்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. அந்தப் படம் முடிஞ்சு வந்த ரசிகர்கள், என்னைப் பார்த்ததும் கைகொடுத்தாங்க.
நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. நான் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நேரத்துல, ‘இந்த இடத்தை காப்பாற்றினா போதும்’னு முடிவு பண்ணினேன். அதுக்கு மேல பேராசைப் படக் கூடாதுன்னும் நினைச்சேன். அப்படித்தான் இப்ப வரை போய்கிட்டிருக்கேன்.
Q
சினிமாவுல அடுத்தக் கட்டமா என்ன திட்டம் இருக்கு?
A
எந்த ஆசையும் இல்லை. எந்த திட்டமும் இல்லை. நடிப்புதான். இதுல தொடர்ந்து போய் கொண்டே இருக்கணும். எனக்கு அந்த அறிவுதான் இருக்கு. சில வருடங்கள் கழிச்சு படம் தயாரிக்கிற எண்ணம் இருக்கு.














