சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரை சந்தித்து நேற்று அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் என்பது வெறும் பொருளாதார சலுகைகளாக மட்டுமல்லாமல், வாழ்வுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு சார்ந்தது.
பாக் ஜலசந்தி பகுதியில் நிலவும் எல்லை மீறி மீன் பிடித்தல் தொடர்பான மோதல் தான் மீனவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை. எனவே, கச்சத்தீவை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாக்குறுதி, தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
மீனவர்கள் கைது நடவடிக்கை
எல்லை தாண்டும் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகளை தவிர்த்து, மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்பவும், அவர் மீதான அபராதத்தை ரத்து செய்யவும் தூதரக ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும்.
உயர் பதவிகளான ஐஏஸ், ஐபிஎஸ், நீதித்துறை போன்ற இடங்களில் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் உள்ளதால் மீனவர்களை பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி) பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து மீனவ குடியிருப்புகளுக்கு 100 நாட்களில் பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சிங்காரவேலர் வீடுகட்டும் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மீன் பிடித்தலின் போது உயிரிழக்கும் மீனவர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு, டீசல் மானிய அளவை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்துதல், ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மானியத் தொகையாக ரூ.1 கோடி வழங்குதல், அரசே படகு கட்டும் தளங்களை அமைத்தல், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை நாளொன்றுக்கு ரூ.500 வீதம் என ரூ.30,500 ஆக உயர்த்தி வழங்குதல், காசிமேடு போன்ற முக்கிய துறைமுகங்களுக்கு அருகில் மீன்களை பதப்படுத்த மீன் பூங்காக்கள் மற்றும் நவீன செயலாக்க ஆலைகளை அமைத்தல் போன்ற மீனவர்களின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














