“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
“இந்த நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசினேன். இதை கேட்டு அவர் உற்சாகம் அடைந்தார். அவர் இந்த நிகழ்வை காணொலியில் பார்த்திருப்பார். (இந்த அமைப்பில் இணையாத இந்தியா, பார்வையாளராக பங்கேற்றது) இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய நாடுகள். (அப்போது இருநாட்டின் பிரதிநிதிகளையும் எழுந்து நிற்குமாறு ட்ரம்ப் கூறினார்).
இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. நான் பிரதமர் மோடியை நன்கு அறிவேன். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறித்து ஓரளவுதான் தெரியும். பாகிஸ்தானின் ராணுவ தளபதி (அசிம் முனீர்) சிறந்த போராளி.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் குறித்து செய்தித்தாள்களை வாசித்தும் அறிந்து கொண்டேன். அந்த போர் இருதரப்புக்கும் இடையே தீவிரமாக இருந்தது. சுமார் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை விலை உயர்ந்தவை. அந்தச் சூழலில்தான் அவர்களை அழைத்து பேசினேன்.
‘கவனியுங்கள்… இந்த போரை நிறுத்தவில்லை என்றால் இரு நாடுகள் உடனும் எங்களால் வர்த்தகம் செய்ய முடியாது’ என தெரிவித்தேன். அதை கேட்ட அவர்கள் ‘வேண்டாம்… வேண்டாம்…’ என்றனர்.
அப்போது மீண்டும் எனது நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்தேன். ‘நீங்கள் போரை தொடர்ந்தால் 200 சதவீதம் வரி விதிப்பேன்’ என தெரிவித்தேன். அப்போது அவர்களில் ஒருவர், அப்படி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அது யாரென சொல்ல முடியாது. அதன் பின்னர் தாக்குதல் சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது.
அவர்கள் போர் புரிவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், நிதி ரீதியாக இழப்பு ஏற்படும் என்பதால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினர். இரண்டு தேசங்களும் அணு ஆயுத பலம் பெற்றவை. அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதை எண்ணி பெருமை கொள்கிறேன். பிரதமர் மோடி தலைசிறந்தவர்” என ட்ரம்ப் இந்த நிகழ்வில் பேசினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது இந்தியா. தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதல் முயற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதை இந்தியா பாதுகாப்பு படை வானிலேயே இடைமறித்து அழித்தது. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே தாக்குதல் தீவிரமடைந்தது.
கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார். அதுமுதல் இதுவரை 90+ முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அவர் சொல்லியுள்ளார். இருப்பினும் இதில் மூன்றாம் தரப்பின் குறுக்கீடு இல்லை என இந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.














