தமிழகத்தில் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறிஇருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டே, உயர் நீதிமன்றம் சைதை துரைசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது” என்று வாதிட்டார்.
சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, “கொளத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் புதன்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது.













