‘மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தின்போது காவல் துறை தாக்குதல் நடத்தவில்லை’ என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நேற்றைய விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும்போது, “மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. குறிப்பாக இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணியை காவல்துறை நடத்திய விதம் ஏற்புடையதல்ல. மேலும், மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை திமுகதான் கனிவோடு பரிசீலித்து நிறைவேற்றித் தருகிறது. சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தியபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் காவல்துறை அந்த இடத்தில் இருந்து போராட்டக் குழுவை அப்புறப்படுத்தும்போது சில சம்பவங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது. ஜான்சிராணி மீது காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை.
அவரே தவறி விழுந்துவிட்டார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சை அளித்தது காவல்துறையினர்தான். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும், இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் அமைச்சர் கீதா ஜீவன், சங்கத் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது” என்றார்.













