சென்னையில் கடற்கரை – தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது.
தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை – வேளச்சேரி, கடற்கரை – கும்மிடிப்பூண்டி, கடற்கரை – அரக்கோணம் என நான்கு தடங்களில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லபவர்கள் என அனைவரும் பயணிக்கின்றனர்.
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, நடைமேடை 10 மற்றும் 11-ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20-ம் தேதி நள்ளிரவு முதல் ஏப். 5-ம் தேதி நள்ளிரவு வரை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே (சென்னை கோட்டம்) அறிவித்தது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார விரைவு ரயில்கள் 6-வது நடைமேடையிலும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இந்த 45 நாட்களிலும் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 80 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும், 80 ரயில்கள் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
புறநகர் மின்சார ரயில் சேவைகளின் புதிய அட்டவணையின்படி, தற்போது இயக்கப்படும் 204 ரயில் சேவைகளுக்குப் பதிலாக மொத்தம் 160 ரயில் சேவைகள் இருமார்க்கமாக இயக்கப்படும். செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் முதல் கடற்கரை வரை மொத்தம் 67 ரயில் சேவைகள் இயக்கப்படும்.
எழும்பூர் நிலையத்திலேயே 11 ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புறநகர் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகளுக்கு உதவும் வகையில் தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.
ரயில் சேவை பாதிப்பு: இந்த சூழலில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட முதல் நாளன்றே கடற்கரை – தாம்பரம் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதியடைந்தனர்.













