விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கிளியனூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களான கிருஷ்ணவேணி தரப்புக்கும், வில்வமணி தரப்புக்குமிடையே தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த பாஸ்கர் என்பவர், வில்வமணிக்கு ஆதரவாக வேலை செய்துள்ளார்.
ஆனால், தேர்தலில் கிருஷ்ணவேணி வெற்றி பெற்று, மீண்டும் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார். 2013 மே 29-ம் தேதி வில்வமணி தலைமையில், கிராமத்தில் உள்ள கோயிலில் பாஸ்கர் திருவிழாவை நடத்தி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்கள் மதன்ராஜ், மதன்குமார் மற்றும் உறவினர்கள் காத்தமுத்து, பார்த்திபன், ராணி, மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து, சுரேஷ், ஜெயராஜ், குமார், முரளி, தாஸ் என்ற சிவப்பிரகாசம், ஜனார்த்தனன், சிவக்குமார், ஜெயசேகர், வீரமணி, வேலு, ஜெயகாந்தன், வினோத்குமார், கருணாநிதி, ஞானசேகரன், ராமதாஸ் ஆகிய 23 பேரும், திருவிழா முடிந்து வீட்டில் இருந்த பாஸ்கரை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கிளியனூர் போலீஸார் விசாரணை நடத்தி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 23 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், கொலைக் குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்று கூறி, 2017-ல் 23 பேரையும் விடுவித்தது.
இதை எதிர்த்து அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் நடந்தது.
காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜரானார்.மேல்முறையீட்டு மனுதாரரான அமுதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். சுரேஷ், இந்த கொலையில் ஈடுபட்டது தாங்கள்தான் என கிருஷ்ணவேணி மகன்களே முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தக் கொலை மனுதாரரின் எதிரிலேயே நடந்துள்ளது. அவரும் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால், வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் என்று தீர்மானித்து, திண்டிவனம் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் குமார் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதாகவும், மீதமுள்ள கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














