தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றும், அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி: சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைக்கு தீர்வாகவும், நிதி ஆதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் TN TReDS என்ற தளத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதுவரை ரூ.5,171 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மூலம் எம்எஸ்எம்இ துறைக்கு உதவியிருப்பதை பாராட்டுகிறோம். இந்த நிதிசார்ந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், திருச்சியின் வர்த்தகக் கட்டுமானத்தை மேம்படுத்தும் வாய்ப்பை இந்த பட்ஜெட் தவறவிட்டுள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ள திருச்சியில் வரியில்லா வர்த்தகக் கிடங்கு மண்டலம் அல்லது விமான சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக மானியங்கள் குறித்து அறிவிப்புகள் இல்லாதது பெரும் குறையாகும்.
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுச் செயலாளர் எஸ்.புஷ்பவனம்: தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் அளிக்கப்படும் இடைக்கால பட்ஜெட், அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், தோல்விகளை பற்றி மவுனம் சாதிப்பதும் இயற்கை.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பாராட்டுக்குரியவை. இருந்தாலும் நில அளவு, பட்டா போன்ற புகார்கள் ஆண்டுக்கணக்கில் எல்லா மாவட்டங்களிலும் தீர்க்கப்படாமல் உள்ளன. தமிழக பொருளாதார வளர்ச்சி 11.9 சதவீதமாக உயர்ந்திருப்பது பெருமை தருகிறது.
பத்திரப்பதிவு கட்டணம், மோட்டார் வாகன கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை உயர்த்தப்பட்டிருந்தாலும் பட்ஜெட்டில் வருவாய் திட்டமிட்டதைவிட குறைந்திருக்கிறது. 2027 மார்ச் 31-ம் தேதி தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.10.7 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக எந்த அரசு வந்தாலும் இதை சமாளிப்பது கடினம்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.அலீம்: தமிழகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் நல்ல நிர்வாகம் காரணமாக குழந்தை இறப்பு விகிதம் 12/1000 ஆகவும், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் 35/1,00,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது தேசிய சராசரியை விட குறைவாகும். மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கப் பயன்படும் மற்றும் புற்றுநோய்கள், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான திட்டங்கள் மற்றும் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்தும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பி.கோபாலகிருஷ்ணன்: ஜவுளி, காதி துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கியுள்ளதை பாராட்டுகிறோம். இந்த வலுவான நிதி உதவி, கரூர் போன்ற ஜவுளி தொழில் நகரங்களில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, சிறு, குறு தொழில் நிறுவன வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஜவுளிகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும்.
தொழில்நுட்ப மேம்பாடு, மதிப்பு கூட்டல், தொழில் துறைக்கு உகந்த கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பிராந்தியத்தில் நிலையான வேலை வாய்ப்பை உருவாக்கும்.
என்.கனகசபாபதி, எஸ்.புஷ்பவனம், எம்.ஏ.அலீம், பி.கோபாலகிருஷ்ணன், ஆர்.பழனிவேலு
பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஆர்.பழனிவேலு: இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் இடம் பெறவில்லை. தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்த போதுமான நிதி ஆதாரங்கள் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி, உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி என அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நலிந்து வரும் குறு, சிறு நடுத்தரத் தொழில்களுக்கு புத்துயிர் ஊட்டி வளர்ச்சிப் பாதையில் செல்ல ரூ.5,171 கோடி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்பதில் ஐயம் இல்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை:
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது: இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மகளிர் உரிமைத் தொகையாக ஒரே நாளில் ரூ.6,550 கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், எங்களுக்கு நிதிப் பற்றாக்குறையை காரணம் சொல்வது ஏற்புடையது அல்ல. எங்களுக்கு மாதம் ரூ.20 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.240 கோடி ஒதுக்கினாலே பணி நிரந்தரம் செய்ய முடியும். ரூ.6,550 கோடியை ஒப்பிடும்போது ரூ.240 கோடி ஒரு விஷயமே கிடையாது.
நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.2,500 சம்பள உயர்வு, மே மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, தகுதித்தேர்வுக்கு சிறப்பு மதிப்பெண் ஆகிய வாக்குறுதிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டன.
ஆனால், அதற்கு இதுவரை அரசாணை வெளியிடாமல் அலைக்கழிப்பது வேதனை அளிக்கிறது. எனவே, திமுக தேர்தல் வாக்குறுதியின்படி எங்களை பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை: விவசாயிகள் ஏமாற்றம் –
தேர்தலையொட்டி ஏற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருவதாக பட்ஜெட் அமைந்துள்ளது என வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: 5 ஆண்டுகள் ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட திட்டங்களுடைய மறு வாசிப்பாக பட்ஜெட் வெளிவந்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. குறிப்பாக விவசாய கடன்தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, ஆயிரம் தடுப்பணைகள் கட்டும் திட்டம், அணைகள் தூர்வாரும் பணிகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்: மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும், தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. 2 அரசுகளும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளன.
வேளாண் கடன் தள்ளுபடி, பால் கொள்முதல் விலை உயர்வு, குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,100 கொள்முதல் விலை, டன் கரும்புக்கு ரூ.4,000 விலை உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லை. கொள்முதல் நிலையங்களில் நெல் உலர் இயந்திரம் அமைப்பது, இலவச வேளாண் மின் இணைப்பு வழங்குவது ஆகியவை குறித்த அறிவிப்புகள் இல்லை.
குறிப்பாக, தேர்தலையொட்டி ஏற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருவதாக பட்ஜெட் அமைந்துள்ளது.
காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: தேர்தலை கருத்தில் கொண்டு வியக்கும் வரும் கால அறிவிப்புகள் எதுவும் இல்லை. 4 ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டவை செயல்பாட்டில் உள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று பூசி மெழுகப்பட்ட பட்ஜெட்டாகதான் உள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, கடன் தள்ளுபடி, மானியம் என எதுவும் இல்லாத வேளாண் பட்ஜெட்டாக உள்ளது.
இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும், கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளான விவசாய கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, தடுப்பணைகள் கட்டுவது, அணைகளை தூர்வாருதல் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களுக்கு இடமில்லை. கடந்த 5 ஆண்டுகால தொகுப்பை இடைக்கால பட்ஜெட் என்கிற பெயரில் தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக உள்ளது.
புதிய அறிவிப்புகள் இல்லாதது ஏன்?
தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற கருத்து நிலவியது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














