சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, பிப்.8-ம் தேதி (நேற்று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நடைமேடை மாற்றம்: புறநகர் மின்சார ரயில்கள் மேற்கண்ட நாட்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்லும்.
செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயில்கள் 5-வது நடைமேடை வழியாகவும், மறுமார்க்கத்தில், கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் ரயில்கள் 6-வது நடைமேடை வழியாகவும் இயக்கப்படும்.
வார நாட்களில் (பிப்.9 முதல் 18 வரை) கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல, கூடுவாஞ்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.05. 10.10, 11.15 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும். தாம்பரம் – கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.8, 15) கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்படும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.00, 11.00, 11.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



