ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற கோடீஸ்வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் திரட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் விசாரணை ஆவணங்களை, அந்நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளியிடத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணத் தொகுப்பில், பல முக்கிய பிரமுகர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த ஆவணங்களில் இருந்த ஒரு மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டியிருந்தார். பில் கேட்ஸுடனான தனது உறவு குறித்த எப்ஸ்டீன் கோப்புகளில், “ரஷ்யப் பெண்களுடனான பாலியல் உறவின் விளைவுகளைச் சமாளிக்க பில் கேட்ஸுக்கு மருந்துகளைப் பெற்றுத் தருவது முதல், திருமணமான பெண்களுடன் அவர் சட்டவிரோதமாகச் சந்திப்புகளை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பது வரை இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் 9நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில்கேட்ஸ் அளித்த நேர்காணலில், “எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற மின்னஞ்சல் ஒருபோதும் எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. அப்போது அவருடைய எண்ணம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதேனும் ஒரு வகையில் என்னை தாக்க முயற்சித்தாரா எனத் தெரியவில்லை.
நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது” என்றார்.
இதுபற்றி பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், “ பில் கேட்ஸுடன் தனக்கு ஒரு தொடர்ச்சியான உறவு இல்லாததால் எப்ஸ்டீனுக்கு ஏற்பட்ட விரக்தியும், அவரை சிக்க வைப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் அவர் எந்த எல்லைக்குச் செல்வார் என்பதுதான் இந்த ஆவணங்கள் நிரூபிக்கும் ஒரே விஷயம்” என்றார்.
அமெரிக்காவின் தேசிய பொது வானொலிக்கு பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா அளித்த பேட்டியில், “இந்த ஆவணங்களின் வெளியீடு என் திருமண வாழ்க்கையின் மிகவும் வேதனையான காலங்களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. இந்த கோப்புகள் வெளியீடு குறித்த கேள்விகளுக்கு பில்கேட்ஸ் விரிவாக பதிலளிக்க வேண்டும்” என்றார்.



