நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயல்படும் தனியார் பள்ளியில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்பவர் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் பகதூர் (25) பெங்களூருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்றார். சில மணி நேரங்கள் கழித்து நாய் மட்டும் வீடு திரும்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பகதூரைத் தேடினர். பள்ளி வளாகத்தில் படுகாயங்களுடன் கிடந்த பகதூரை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை, பகதூரின் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றதும், அதைக் காப்பாற்ற முயன்ற பகதூரைத் தாக்கியதும் தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக பகதூர் சேர்க்கப்பட்டுள்ளார்.



