பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் – தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்

0
32

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது, பலுசிஸ்தான் பலூச் மன்னரின் கீழ் தனி நாடாக இருந்து வந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அதனை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது முதல், அங்கு அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக சண்டையிட்டு வருகிறது. பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பலுசிஸ்தானின் பல மாவட்டங்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 17 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

கரான், மஸ்துங், தும்ப், பாஸ்னி உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நடவடிக்கைகளை முடித்துவிட்டோம். அவை எங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டன. தலைநகர் குவெட்டா மற்றும் நோஷ்கியின் சில பகுதிகளிலும் எங்கள் போராளிகள் உள்ளனர். அங்கு பாகிஸ்தானின் ராணுவம் விரட்டியடிக்கப்பட்டுவிட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து விவரித்துள்ள பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்பராஸ் புக்தி, ‘‘பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த போராளிகள் வங்கிகள், சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 31 பொதுமக்களும் 17 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் 145 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான அனைத்து மாவட்டங்களும் மீட்கப்பட்டுள்ளன. நாங்கள் அவர்களை துரத்துகிறோம். அவர்களை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடமாட்டோம். எங்கள் ரத்தம் அவ்வளவு மலிவானது அல்ல’’ என தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக பலுசிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பாதுகாப்பாக திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளதாக 39வயது கடைக்காரர் ஹம்துல்லா தெரிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், எப்போதும் பரபரப்பாக இருக்கும் குவெட்டா நகரத்தில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக குவெட்டா சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என குற்றம் சாட்டினார். எனினும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. இதே கருத்தை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, ‘‘பாகிஸ்தான் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இது, தனது சொந்த தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் வழக்கமான தந்திரங்கள் அன்றி வேறில்லை.

வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் திரும்ப திரும்ப கூறி வருகிறது. இதற்குப் பதிலாக, அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் அது கவனம் செலுத்துவது சிறந்ததாக இருக்கும். அதன் அடக்குமுறை, கொடூரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நன்கு அறியப்பட்டதே’’ என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here