சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. அசாம் மாநிலம் டகுகானா மற்றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி நேற்று உத்தராகண்ட் அணியுடன் சிலப்பதர் கால்பந்து மைதானத்தில் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு அணி வீரர் முமாசங்கர் 68-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அந்த கோலே அணியின் வெற்றி கோலாக மாறியுள்ளது. இதன்மூலம் ஏ பிரிவில் தமிழ்நாடு அணி 10 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. இதே ஏ பிரிவில் மேற்கு வங்க அணி 11 புள்ளிகளைப் பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


