சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், “எனது வார்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றிவிட்டேன். எதிர்க்கட்சி வார்டு என்றும் பாராமல், திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
சென்னையில் 22,875 மாடுகள் உரிமையாளர்களால் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றிதிரிவதை தடுக்க ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 4237 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், 17 இடங்களில் மாட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் மீறி, சாலையில் மாடுகள் திரிவதை தடுக்கவும், மாடுகள் வளர்ப்பை முறைப்படுத்தவும், இந்த மாடுகளை வளர்க்க அதன் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கவும், அப்போது, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தவும், அதற்காக 25 ஆயிரம் மைக்ரோசிப்கள் மற்றும் சிப் ரீடர்கள் வாங்கவும், உரிமம்பெற்று, மைக்ரோசிப் பொருத்த மார்ச் 18 வரை அவகாசம் வழங்கவும் மாமன்றத்தில் அனுமதி அளித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலம், 12-வது வார்டு, பாலகிருஷ்ணா காலனி 3-வது தெருவுக்கு, முன்னாள் திருவொற்றியூர் நகராட்சி தலைவர் தி.வ.விசுவநாதன் பெயரை சூட்டவும், ஜான்ட்ரவர் தெருவுக்கு முன்னாள் கவுன்சிலர் க.வீராசாமி பெயரை சூட்டவும், ராமாவரத்தில் அமைய இருக்கும் பூங்காவுக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பெயரை சூட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.
மாநகராட்சி சேவைகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ரூ.3.49 கோடியில் ஒருங்கிணைக்கவும், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில் சிசிடிவி கேமராக்களை நிறுவவும், புளியந்தோப்பு இறைச்சி கூடத்தில் கூடுதல் பணிகளை ரூ.9.29 கோடியில் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 118 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.



