ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் பிரப்ரவரி 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பயிற்சி ஆட்டங்கள் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆடுகளங்கள் மற்றும் கொழும்பில் உள்ள கிரிக்கெட் கிளப் மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம், சிங்கள விளையாட்டு கிளப் மைதானம் ஆகியவற்றில் நடைபெறுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 2-ம் தேதி கனடா – இத்தாலி அணிகள் இரவு 7 மணிக்கு மோதுகின்றன. தொடர்ந்து 3-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நேபாளம் – ஐக்கிய அரபு அணிகளும், 5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கனடா – நேபாளம் அணிகளும், 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி – ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மோதுகின்றன.
இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் 4-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறுகிறது.



