தென்கொரியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒப்புக்கொண்டபடி நாங்கள் வரியைக் குறைத்துள்ளோம். அதே வேகத்தை எங்கள் வர்த்தகக் கூட்டாளிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், மரக் கட்டைகள் (Lumber) மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்படும். இதர பொருட்களுக்கான வரி விகிதம் 15-லிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
அமெரிக்கக் கப்பல் கட்டும் தளங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக, சுமார் 350 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்வதாக தென்கொரியா கடந்த ஜூலை மாதம் உறுதியளித்திருந்தது. இதற்கான 5 மசோதாக்கள் தற்போது தென்கொரிய நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிசீலனையில் உள்ளன. இந்தச் சட்ட நடைமுறைகள் தாமதமாவதால் அதிருப்தியடைந்த ட்ரம்ப் அந்நாட்டுக்கான வரியை உயர்த்தியதாக கூறப்படுகிறது.


