குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 369 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து நெல்லை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் தனிஸ்லாஸ், மார்கிரெட் மேரி ஆகியோர் உயிரிழந்ததற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் என ரூ. 4 லட்சத்திற்கான காசோலையினையும், அதே விபத்தில் அமுதா என்பவர் உயிரிழந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் அழகுமீனா வழங்கினார்.














