தாயுடன் பள்ளிக்கு சென்றபோது ஸ்கூட்டரில் இருந்து விழுந்த மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

0
215

தாயுடன் பள்ளிக்குச் சென்ற, பள்ளி மாணவி ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவரது 10 வயது மகள் சவுமியா புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணி செய்துவரும் யாமினி, வேலைக்கு போகும்போது ஸ்கூட்டரில் மகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை பணிக்கு புறப்பட்ட யாமினி, மகளை பின்னால் அமர வைத்து, பேப்பர் மில்ஸ் சாலை வழியே பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அதே பகுதி வீனஸ் மார்க்கெட் தாண்டி செல்லும்போது, சாலையில் தடுமாறிய நிலையில், தாயும் மகளும் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த தனியார் தண்ணீர் லாரி, சிறுமி சவுமியா மீது ஏறிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி இறந்தார்.

செம்பியம் போலீஸார் விரைந்து சென்று தண்ணீர் லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாய் கண் எதிரே மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here