தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கும்: கமல்ஹாசன் தகவல்

0
468

முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம-க்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கக்கூடிய நிலையில் 3 இடங்கள் திமுகவுக்கும் ஒரு இடம் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம வேட்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிர்வாகக்குழு – செயற்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும், மநீம கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், மாநிலச் செயலாளர்கள் முரளி அப்பாஸ், மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வரை சந்தித்த பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் சொன்னார். அதேபோல், திமுக மூத்த நிர்வாகிகள் தங்கள் அறிவுரைகளையும் அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்கள். வேட்புமனு தாக்கல் எப்போது தாக்கல் செய்யலாம் என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசிக்கப்படும்.

நான் எப்போதுமே தமிழகத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறேன். தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்த நீங்கள் இப்போது இணைந்து செயல்படுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறேன்.

கன்னட மொழி தொடர்பாக நான் தெரிவித்த கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், நான் மன்னிப்பு கேட்காவிட்டால் எனது படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் கேட்கிறீர்கள். இதற்கு முன்பும் இதுபோன்று நான் மிரட்டப்பட்டிருக்கிறேன்.

சட்டம், நியாயத்தை நம்புகிறேன்: எனது கருத்து தவறாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். தவறாக இல்லாவிட்டால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது எனது வாழ்வியல் முறை. இது ஜனநாயக நாடு. நான் சட்டத்தையும் நியாயத்தையும் நம்புகிறேன். எப்போதும் அன்புதான் வெற்றிபெறும். கன்னடம் மீதும், தெலுங்கு மீதும், கேரளம் மீதும் நான் வைத்திருக்கும் அன்பு உண்மையானது. ஏதோ ஒரு மறைமுக செயல்திட்டத்தோடு செயல்படுபவர்களைத் தவிர வேறு யாரும் என்னை சந்தேகிக்க மாட்டார்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here