குமரி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குறிப்பாக மலைப்பகுதிகளான கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், சுருளோடு போன்ற பல இடங்களில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8: 30 மணி அளவில் இந்த பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதே போல் மார்த்தாண்டம், குழித்துறை, கொல்லங்கோடு உட்பட மேற்கு மாவட்ட பகுதிகளில் அனைத்திலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து மின்தடைகள் ஏற்பட்டு இரவு முழுவதும் மேற்கு மாவட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.