கோவை, நீலகிரி மாவட்டங்களில் மே 25, 26-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

0
489

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் அடுத்த சில தினங்களில் தொடங்கி, தமிழகப் பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27 முதல் 29-ம் தேதி வரை ஓரரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25, 26-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் மே 23-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கொட்டாரம், திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் 2 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, களியல், தக்கலை, குளச்சல், அணைகெடங்கு, மாம்பழத்துறையாறு, பாலமோர், நெய்யூர், அடையாமடை, சுருளக்கோடு, இரணியல் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here