ர​யில் நிலை​யங்​களில் மோதலில் ஈடு​பட்ட 31 மாணவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

0
184

பல்வேறு ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 31 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு ரயில்வே போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது, அவர்களுக்குள் மோதல் நடப்பது அதிகரிக்கிறது.

பயணிகள் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் மோதலைத் தடுக்கும் வகையில், மின்சார ரயில்கள், ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தில் கொருக்குப்பேட்டை, கிண்டி, சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களில் 5 இளஞ்சிறார்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 31 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு ரயில்வே போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து, ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியதாவது:

கல்லூரி மாணவர்களில் ஒரு சிலர் குழுவாக பயணிக்கும்போது, விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொள்கின்றனர். அவர்களை பலமுறை எச்சரித்து அனுப்பியுள்ளோம். இதையும் மீறி, தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் சில மாணவர்களை கைதுசெய்து வருகிறோம்.

சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 17 மாணவர்கள், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

கல்லூரி மற்றும் மாணவர்களின் பெயர்கள், வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையும் அளித்திருக்கிறோம். இதன்பேரில், தமிழக உயர் கல்வித் துறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here