நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (46). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் வைக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த பாகுலேயன் நாயர் (59) என்பவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து நித்திரவிளை பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். கூனன்விளை என்ற பகுதியில் செல்லும்போது தூத்தூர் பகுதி தாமஸ்நகரைச் சேர்ந்த ராஜேஷ் (42) என்பவர் அதிவேகமாக வந்த சொகுசு கார் அந்தப் பைக் மீது மோதியுள்ளது.
இதில் வலது கால், இடுப்புப் பகுதியில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாகுலேயன் நாயருக்கும் காயம் ஏற்பட்டு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுசம்பந்தமாக அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.