தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், மத்திய அரசிடம் நிவாரண நிதியை அளிக்க பழனிசாமி அழுத்தம் தரவேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பெருமழையின்போது ஆளுங்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், குறைகளை சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியுடன் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றன. சேலத்துக்கும், சென்னைக்கும் மட்டுமே அரசியல் செய்யும் பழனிசாமி, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான் அதிக பாதிப்பு என கூறியுள்ளார்.
கடந்த காலத்தை அவர் திரும்பி பார்க்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்ததால், 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பதை மறக்க முடியாது. பல லட்சம் வீடுகளும் சேதமடைந்தன. சாத்தனூர் அணையில், முதல்வர் அறிவுறுத்தல்படி கடந்த நவ.25 முதல் தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டுள்ளது. 5 கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 1.68 லட்சம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். அதனால்தான் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. உண்மையிலேயே பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் உயிர் சேதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதைவிட்டு, வஞ்சக எண்ணத்துடன் குறை சொல்லி வருகிறார். அவர், வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற அழுத்தம் தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது.
விழுப்புரத்தில், இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடிந்த பின்னர் அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கட்சியில் மகளிரணி பொறுப்பில் இருக்கும் விஜயராணி மற்றும் அவரது உறவினர் ராமர் என்பவரும் உள்நோக்கத்துடன் அமைச்சர் மீது சேற்றை வாரி வீசியுள்ளனர். இதுபோன்ற எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், மக்கள் பணிகளில் தொடர்ந்து பயணிப்போம்.
விஞ்ஞான ரீதியாக நாம் வளர்ந்திருந்தாலும் ஒருசில பேரிடர்களை கணிக்க முடியாத இடத்தில்தான் உள்ளோம். இதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரும் காலங்களில், நிலச்சரிவு ஏற்படும் என கருதக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு பகுதியில் மாற்ற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதுதொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.














