மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஓடியன்’ என்ற படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மேனன். ஏராளமான விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் மீது நடிகை மஞ்சு வாரியர், கடந்த 2019-ம் ஆண்டு போலீஸில் புகார் கொடுத்தார். திருவனந்தபுரம் டிஜிபியிடம் நேரில் கொடுத்த அந்தப் புகாரில் தன்னையும் தனது நண்பர்களையும் சமூக வலைதளங்களில் ஸ்ரீகுமார் மேனன் தொடர்ந்து அவமானப் படுத்தி வருவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு அப்போது பதிலளித்த ஸ்ரீகுமார் மேனன், “உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான அவமானங்களைச் சந்தித்துவிட்டேன். உங்கள் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” என்றார். இது தொடர்பான வழக்கு திருச்சூர் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு மஞ்சு வாரியர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.














