பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சலுங்கே, தனது நண்பரும் தொழிலதிபருமான பிரதாப், சங்கர் கவுடா, சுதீர், நடராஜா ஆகியோருடன் சில தினங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்திற்கு சென்றார்.
நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தன் நண்பர்களுடன் அங்கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்பட்டார். கேப்டன் ஹிமான்ஸூ இயக்கிய இந்த ஹெலிகாப்டர் சுமார் 2.20 மணியளவில் ஜோஷிமத் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கேப்டன் ஹிமான்ஸூ, போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் சாலுங்கே உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மோசமான வானிலை
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வரா கூறுகையில், “இந்த விபத்து குறித்து சம்பவம் நிகழ்ந்த சாமோஜி மாவட்ட ஆட்சியர் கவுரவ் குமாருடன் பேசினேன். விபத்து நிகழ்ந்த ஜோஷிமத் மலைப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தார்.
உயிரிழந்த 6 பேரையும் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பெங்களூருவை சேர்ந்த 5 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்” என்றார்.














