தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் திருப்பதிசாரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் மற்றும் மீன் பாக்ஸ் ஏற்றி வந்த மினிடெம்போவை சோதனை செய்தபோது, மீன்பாக்ஸினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காரில் இருந்த ஆடராவிளை தனுஷ், தூத்துக்குடி முத்தையாபுரம் தினேஷ், குலசேகரன்பட்டினம் ரதீஷ்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அம்பர்கிரிஸ் உயர்ரக வாசனை திரவியங்கள், மதுபானங்கள் மற்றும் சில மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால், இது ‘கடல் தங்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது.