மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க் கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த இருமாநிலங்களிலும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அக்கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 18, ஹரியாணாவின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகள் மட்டுமே அக்கூட்டணிக்கு கிடைத்தன. இந்த இரண்டு மாநிலங்களிலும்முறையே 30 மற்றும் 5 தொகுதிகளை இண்டியா கூட்டணி வென்றது. அதேபோல், ஜார்க்கண் டில் ஜேஎம்எம் தலைமையில் இண்டியா கூட்டணி ஆட்சி நடை பெறுகிறது. இந்த முறையும் இங்குஇண்டியா கூட்டணியே போட்டியிடுகிறது. என்டிஏவை நேரடியாக இண்டியா கூட்டணி எதிர்க்க உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால், மூன்று மாநிலங்களுடன் சேர்த்தே ஜம்மு-காஷ்மீருக்கும் தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது, 370 சட்டப்பிரிவு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தலாகும்.
ஜம்முவில் பாஜக தன் செல்வாக்கை வளர்த்துள்ளது. ஆனால், காஷ்மீரில் அக்கட்சிக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தால் மக்களவை தேர்தலில் அக்கட்சிபோட்டியிடவில்லை. இதற்காக, பாஜக காஷ்மீரில் ஒரு புதிய உத்தியை கையாள திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுடன் பாஜக கூட்டணிஅமைத்து களம் காண உள்ளது.ஏனெனில், காஷ்மீரில் சுயேச்சைகளுக்கும், சிறிய அரசியல் கட்சிகளுக்கும் செல்வாக்கு இருப்பது மக்களவை தேர்தலின் முடிவுகளின் மூலம் அறியப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின்(பிடிபி) மெகபூபா முப்தி ஆகியோரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். கடைசியாக, கடந்த 2014-ல் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பேரவை தேர்தலில் பிடிபி-பாஜக கூட்டணிஆட்சி அமைத்தது.
வரவிருக்கும் தேர்தலில் பிடிபி மீண்டும் பாஜகவுடன் சேராமல் இண்டியா கூட்டணியுடன் இணையும் வாய்ப்புகளே அதிகம். இதை எதிர்பார்த்தே பாஜக காஷ்மீரின் சிறிய மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.
எனவே, இந்த நான்கு மாநில பேரவைகளுக்கானத் தேர்தல், இண்டியா மற்றும் என்டிஏவுக்கு இடையிலான முதல் நேரடிப் போட்டியாக அமைய உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தனது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்த ஸ்ரீநகரை பிரதமர் மோடி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் சுமார் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை அமைத்தன. ஆனால், தமிழ்நாடு, பிஹார்ஆகிய மாநிலங்களில் மட்டுமேஇண்டியா கூட்டணி இணைந்துபோட்டியிட்டன. இதர மாநிலங்களில் அதன் உறுப்பினர்கள் தனித்தனியாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில், வரும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்தே என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணியின் தற்போதைய உண்மையான பலம் தெரிய வரும்.