உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு: அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி: தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது என்று சொன்னால் அதற்கேற்ப மின்நுகர்வு அதிகரித்திருக்க வேண்டுமே. இன்னும் அதே 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் நுகர்வு செய்யப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் தொடங்க பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. ஆனால், அந்நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதால் ஜிஎஸ்டி வருவாய் அம்மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறது. அந்த ஜிஎஸ்டி வரி வருவாய் நமக்கு கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் அரசு வலியுறுத்த வேண்டும்.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா: தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவதால் நமக்கு ஒரு பலனும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. தொழில் நிறுவனங்களின் வருகையால் வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. பல்வேற தரப்பினருக்கும் வேலைகிடைப்பதால் கிராமப்புற பொருளாதாரம் வளருகிறது. ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்பாக உறுப்பினர் தெரிவித்த யோசனையை பரிசீலித்து வருகிறோம்.
அதிமுக உறுப்பினர் தங்கமணி: மின்வாரியத்துக்கு ரூ.21,178 கோடி மானியம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கிறது. பிறகு ஏன் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது? எங்கள் ஆட்சிக் காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம், இதர மாவட்டங்களில் 12 மணி நேரம் என்ற அளவில்தான் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.68,470 கோடி மானியம் கொடுத்து மின்வாரியத்தை காப்பாற்றி வருகிறோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடனுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வட்டியை நாங்கள் செலுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகத்தான் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாணை போடப்பட்டது.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் அவசர கோலத்தில் அந்த உத்தரவை போட்டீர்கள். அராசணைதான் வெளியிட்டீர்களே தவிர விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவே இல்லை. தற்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதிமுக உறுப்பினர் தங்கமணி: பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று சொன்னீர்களே?
அமைச்சர் செந்தில்பாலாஜி: அதுபோன்று வாக்குறுதி அளிக்கவில்லை. இருந்தபோதும் 500 மதுபான கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி 500 கடைகள் அல்ல, பள்ளி, கல்லூரி அருகே இயங்கிவந்த 103 கடைகள் உள்பட மொத்தம் 603 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் 2 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.