Home தேசிய செய்திகள் காவிரி நீரில் 20 டிஎம்சி பற்றாக்குறை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

காவிரி நீரில் 20 டிஎம்சி பற்றாக்குறை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

0

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் 20 டிஎம்சி பற்றாக்குறை நிலவுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா விடுவிக்காதது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டும் தமிழகத்துக்கான பற்றாக்குறை நீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்றுத் தரவில்லை.

கர்நாடகாவிடம் அதிக நீர் இருப்பு உள்ளது. இருந்தும், குறைந்த அளவு மட்டுமே நீரை அது விடுவிக்கிறது.

ஜூன் 1 முதல் செப்.9 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகாவுக்கு 112.729 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது. கர்நாடகாவுக்கு கிடைத்த மொத்த நீர் வரத்து 140 டிஎம்சி.

சாதாரண சூழலில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 97.408 டிஎம்சி நீரில் குறைந்தது 57 சதவீதமாவது, அதாவது 59.191 டிஎம்சி நீராவது விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு 35 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதில், 20.969 டிஎம்சி நீர் பற்றாக்குறை உள்ளது.

கர்நாடகாவின் நீர் தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளது. ஏன் அவர்கள் இந்த பற்றாக்குறையை சரி செய்யவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் கட்டார்கியுடன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திவான், “கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை நீர் இருப்பு குறித்து கண்காணித்து வருகிறது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, குடிநீர் மற்றும் தொழில்துறைக்குத் தேவைப்படும் நீரின் அளவு, சுற்றுச்சூழல், எல் நினோ என அனைத்தையும் அவர்கள் விவாதித்துள்ளனர்.

கர்நாடகாவில் இனி குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தமிழகத்துக்கு வட கிழக்குப் பருவ மழை நெருங்கி வருகிறது. எனவே, அந்த பருவ மழையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version