ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேற்று பிற்பகல் 57 பயணிகளுடன் புறப்பட்டது. போர் அருங்காட்சியகம் அருகே தையத் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
இதில், பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.