சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள கிங்ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஓர் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
“உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், தாக்குதலால் விமான நிலையம் சேதம் ஏற்பட்டதாகவும், அதன் அளவைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் அவசரப் பணியில் இல்லாத அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் தெரிவித்துள்ளார். இதில் சிவில் விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும் அடங்கும் என்றும், இதன் காரணமாகப் பொதுமக்கள் உயிரிழப்பும் பயண இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதல், சவுதியில் உள்ள ஆரம்கோ நிறுவனத்தின் ஷைபா எண்ணெய் வயல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல், சவுதி அரேபியாவின் பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் மக்களுடனும் அரசுடனும் அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா ஒற்றுமையுடன் நிற்பதாகவும், அங்கு விரைவில் அமைதி திரும்பும் என நம்புவதாகவும் அது கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
சவுதி அரேபியாவில் ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த மே மாதத்துக்குப் பிறகான உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 3.35 டாலர் (3.08%) உயர்ந்து 112.17 டாலராக விற்பனையானது.
இது கடந்த மே 18-ம் தேதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும். வர்த்தகத்தின்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் பேரலுக்கு 112.55 டாலர் வரை தொட்டது. அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட்’ (டபிள்யூடிஐ) கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து, பேரலுக்கு 2.68 டாலர் (2.76%) அதிகரித்து 99.83 டாலராக உயர்ந்தது.
