சென்னையில் பைக் ரேஸை தடுக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தனிப்படையினர் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வதும், வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணாசாலை, சர்தார்பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் 16 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளார்.
மேலும், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கைது செய்வதுடன், பைக்குகளை பறிமுதல் செய்வதற்காக சென்னையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.














