12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

0
198

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. அப்போது பெ.சண்முகம் பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் எடுத்து வருகிறார். அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக பிரதமர் மோடி மாற்றி வருகிறார். இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு ஏராளமான நிபந்தனைகளோடு ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இந்த நிலம் வழங்கப்பட்டது.

ஆனால், ஒரு ஏக்கர் நிலம் கூட பட்டியலின மக்களிடம் இல்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட சட்டப்படி நிலத்தை கையகப்படுத்த மறுக்கிறார்கள். இதில் சட்டத்தடை இல்லை. மனத்தடை மட்டுமே உள்ளது. பஞ்சமி நிலத்தை மீட்டு மக்களுக்கு வழங்கி திமுக அரசு புதிய சாதனையை படைக்க வேண்டும்.

அதேபோல் நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் மிகச்சிறந்த திட்டமாகும். முதல்கட்டமாக 50 லட்சம் ஏக்கர் வழங்கப்படும் என்று கூறி ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட சிறப்பான அந்த திட்டம் யாருக்கும் தெரியாமல் அடங்கி போய்விட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்மூடித்தனமாக செயல்படுகிறது. மனிதாபினமற்ற உத்தரவுகளை பிறப்பிக்கிறது. நீர்நிலைகள் தற்போது எப்படி உள்ளன என்பதை ஒரு குழு அமைத்து ஆய்வு கூட செய்யாமல் நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர்.அவற்றை உடனே செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிடுகின்றனர். இதனால் அரசுக்கும் மக்களுக்கும் மோதலை உருவாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here