ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாயமான இளம் நர்ஸ் உத்திரா (26) கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரின்அலட்சியமே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் பெருந்துறைஅரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே வசித்து வந்த உத்திரா, கடந்த அக்டோபர் 14-ம் தேதி மாலை மருத்துவமனையில் பணி முடிந்து வீடு திரும்பும்போது மாயமானார்.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது கணவர் ரஞ்சித் குமார் அன்றைய தினமே ஊத்துக்குளி காவல் நிலையத்தில் பதற்றத்துடன் புகார் அளித்தார்.ஆனால், புகார் கொடுத்த அந்த முதல் நாளே போலீசார் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
“ஒரு பெண் காணாமல் போயிருக்கிறார் என்று சொன்ன உடனேயே எங்கே சென்றார், கடைசியாக யார் பார்த்தது, செல்போன் எங்கே சுவிட்ச் ஆஃப் ஆனது என விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஊத்துக்குளி போலீசார் அந்த நேரத்தில் உரிய முக்கியத்துவம் தராமல் இழுத்தடித்தனர். உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்காமல், குடும்பத்தினரிடம் சம்பந்தமில்லாத, அவசியமற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தைக் கடத்தினர்” என்று உத்திராவின் பெற்றோர் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் மாயமாகும் வழக்குகளில் முதல் சில மணி நேரங்கள் மிக முக்கியமானவை. அந்த நேரத்தில்
துரிதமாகச் செயல்பட்டு, சாலையோர சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் டவர் இருப்பிடத்தை ஆய்வு செய்திருந்தால், உத்திரா எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதை அன்றிரவே கண்டறிந்து அவரை உயிருடன் காப்பாற்றியிருக்க முடியும் என்பது உறவினர்களின் ஆணித்தரமான வாதமாக உள்ளது. ஆனால், மூன்று நாட்கள் கழித்து அக்டோபர் 17-ம் தேதி இரவு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைப் புதரில் உத்திரா அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிறகே போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பு திரண்டனர். “எங்கள் பெண்ணின் சடலத்தை வாங்க மாட்டோம். இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். புகார் கொடுத்தபோது அலட்சியமாக இருந்த ஊத்துக்குளி காவல் நிலைய போலீசார் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று முழக்கமிட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
உறவினர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் கடுமையான பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். “கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள வீடியோ பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மிக விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். வேலை முடிந்து பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டிய ஒரு இளம் பெண் நர்ஸ், நடுவழியில்
கடத்தப்பட்டு நகைகளுக்காகவும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டு உயிரிழந்த இந்தச் சோகச் சம்பவம், சாமானிய மக்களின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. காவல்துறையின் ஆரம்பக்கட்ட அலட்சியமே ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பொதுமக்களிடையே பெரும் ஆதங்கத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.














