பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அந்தரன்’. தயாரிப்பாளர் மு.கி.சாம்ப சிவம், ரமேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் இராவணன் இயக்கியுள்ளார்.
‘அடவி’, ‘மனிதர்கள்’ படங்களைத் தொடர்ந்து கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிக்கிறார். ஹரி எஸ்.ஆர். இசையமைக்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் இராவணன் கூறும்போது, “அந்தரன் என்றால் வேடன் என்று பொருள். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் அதைத் தலைப்பாக வைத்துள்ளோம். ஓர் இளம் பெண்ணைச் சுற்றி நடக்கும் பல மர்ம நிகழ்வுகளுக்கு என்ன காரணம், அதற்குப் பின்னால் இருப்பவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கக் காவல் அதிகாரி ஒருவர் களத்தில் குதிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
க்ரைம் திரில்லர் கதையான இதில் ஐபிஎஸ் அதிகாரியாக பிரஜினும், இளம் பெண்ணாக இவானா வருணும் நடிக்கின்றனர். ஒரு த்ரில்லர் படத்துக்குத் தேவையான பரபரப்பான திரைக்கதை இதில் இருக்கிறது. பார்வையாளர்களை சீட் நுனிக்கு வரவழைக்கும் காட்சிகளும் இருக்கின்றன. இப்படத்தின் கதையை, ‘நான் லீனியர்’ முறையில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.














