துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் – கிழக்கு மண்டலம் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் மத்திய மண்டலம் அணி 80.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60, ஆர்யன் ஜூயல் 46 ரன்கள் சேர்த்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் தனது பேட்டிங்கை தொடங்கிய கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இதன் மூலம் துலீப் டிராபியில் இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. அவருக்கு 15 வயது 175 நாட்கள் ஆகிறது.
இதற்கு முன்னர் துலீப் டிராபி போட்டியில் அரைசதம் அடித்த இளம் வயது பேட்டர் என்ற சாதனை லக் ஷ்மன் சிங் வசம் இருந்தது. அவர், 1969-ல் இந்த சாதனையை எட்டியிருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 23 நாட்கள் ஆகும். இந்த சாதனையை 57 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் 106 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்யன் பாண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி 25.2 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்களை பறிகொடுத்த கிழக்கு மண்டல அணி 57 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குமார் குஷாக்ரா 0, சுதிப் குமார் கராமி 25, விராட் சிங் 5, கேப்டன் இஷான் கிஷன் 16, அனுகுல் ராய் 16, முகமது கவுனைன் குரேஷி 13, அபிஜித் சர்க்கார் 2, முகேஷ் குமார் 3 ரன்களில் நடையை கட்டினர்.
மத்திய மண்டலம் அணி தரப்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆர்யன் பாண்டே, யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.
குணால் சந்தேலா 2, ஆர்யன் ஜூயல் 8, கேப்டன் ரஜத் பட்டிதார் 5 ரன்களில் வெளியேறினர். அமன் மோஹதே 23, ஆர்யன் பாண்டே 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க மத்திய மண்டலம் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.துலீப் டிராபி தொடரில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி.
